இந்தியா

மின்வெட்டைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் மின் ஊழியர்கள் சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் ஊழியர்களை சனிக்கிழமை சிறைபிடித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதாரண நாட்களிலேயே 4 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் வெயில் உக்கிரமடைந்துள்ளதால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் அமல்படுத்தப்படுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கு முழுமையான மின்சார வசதி கிடைக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர்களைச் சிறைபிடித்து போராட்டம் நடத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

இந்தவகையில், வெள்ளிக் கிழமை இரவு லக்னோவில் சுமார் ஆயிரம் பொதுமக்கள் கூடி ஐந்து மின் ஊழியர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மறுநாள் காலையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மின் ஊழியர்களை மீட்டனர்.

இது குறித்து மாநில மின்வாரிய அதிகாரி நரேந்தர்நாத் மல்லீக் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘லக்னோவை சுற்றியுள்ள கோண்டா, கோரக்பூர் ஆகிய நகரங்களிலும் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. மாநிலம் முழுவதிற்கும் தேவையான அளவு மின்சாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் ஊழியர்களை சிறைப்பிடிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது.’ எனத் தெரிவித்தார்.

வட இந்திய மாநிலங்களில் வெயில் குறைந்தபாடில்லை. சனிக்கிழமை மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் 48.3 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தது. இதற்கு அடுத்தபடியாக புந்தல்கண்ட் பகுதியில் உள்ள பாந்தாவின் 47.6, தலைநகரான லக்னோவில் 47 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.

டெல்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வெயில் காணப்பட்டது.

இது குறித்து மத்திய வானிலை மையத்தின் இயக்குநர் டிபி.யாதவ் கூறியபோது, ‘இன்னும் ஒரு வார காலத்துக்கு வெப்பநிலையில் மாற்றம் இருக்காது. அடுத்த சில நாட்களுக்கு கடும் கோடைக் காற்று மற்றும் புழுதிபுயல் ஆங்காங்கே தொடரும். பருவமழை முன்கூட்டியே பெய்வதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT