பிஹாரில் சட்டவிரோத மது விற் பனை குறித்த தகவல் அளிக்கும் போலீஸார் மற்றும் பொது மக்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் மது அருந்தியதாக கடந்த மாதத்தில் 1,096 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிஹாரில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து மது அருந்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீதான கண்காணிப்பை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பிஹாரில் மது அருந்தியதாக கடந்த ஏப்ரல் 5 முதல் 30-ம் தேதி வரையிலான 26 நாட்களில் 1,096 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உ.பி., ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலாப்பயணிகள் மற்றும் வியாபாரிகளும் அடங்கு வர். இவர்களுக்கு நீதிமன்றங் களும் ஜாமீன் வழங்க மறுத்துள் ளன. இத்துடன், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களிடமிருந்து இதுவரை சுமார் 7,600 மது பாட்டில்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இந்நிலையில் மது விற்பனை தொடர்பான தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப் படும் என்று பிஹார் மாநில மது விலக்கு பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து பிஹார் மாநில மதுவிலக்குத் துறையின் முதன்மை செயலாளர் கே.கே.பாதக் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த முடி யாது. எனவே சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு தகுந்த சன்மானம் அளிக்க முடிவு செய் தோம். இது தொடர்பான புகார் களுக்கு தனி கைப்பேசி எண்கள், ஈமெயில் முகவரி மற்றும் பேக்ஸ் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மது அருந்தி வருவோரையும் எச்சரிக் கும் வகையில் ரயில், பேருந்து மற்றும் விமான நிலையங்களில் எச் சரிக்கை பலகைகள் அமைக்கப்பட உள்ளன. உ.பி., ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் நேபாள எல்லைக்கு சென்று பிஹார்வாசி கள் மது அருந்துவதை தடுக்க, அந்தப் பகுதிகளுக்கு 125 ப்ரீத் அனலைசர் கருவிகள் விநியோகிக் கபட்டுள்ளன. விரைவில் மேலும் 150 கருவிகள் அனுப்பி வைக்கப் பட உள்ளன” என்றார்.
பிஹாரில் தலைநகர் பாட்னா, புத்த தலமான புத்த கயா ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைந்துள்ளன. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின ருக்கு பிஹார் மாநில மதுவிலக்குத் துறை ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், விமானப் பயணிகளிடம் மது பாட்டில்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றி தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள் ளது. மேலும் விமானப் பயணி களின் உடைமைகளை திடீர் சோதனை செய்ய இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி கேட்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு துறையின் உளவுப் பிரிவினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மது அருந்த உ.பி. செல்லும் பிஹார்வாசிகள்
பிஹாரில் மது விற்கவும், குடிக்க வும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள பிஹாரின் பலியா பகுதி குடிமகன்களுக்கு இந்த தடையுத்தரவால் பிரச்சினை இல்லை. அவர்கள் தினமும் உத்தரப்பிரதேச மாநிலம் சுரை மான்பூருக்கு ரயிலில் சென்று மது அருந்தி திரும்புகின்றனர்.
பலியாவில் மாலை 5.00 மணிக்கு பணியை முடிப்பவர்கள், சாப்ரா பயணிகள் ரயிலில் சுரை மான்பூர் கிளம்புகிறார்கள். ஒரு மணி நேர பயணத்தில் சுரைமான் பூர் ரயில் நிலையத்தை அடைகின் றனர். அங்கு உள்ள மதுக்கடையில் வேகமாக மது அருந்திவிட்டு, சாப்ரா-மாவ் ரயிலில் வீடு திரும்பு கின்றனர். இந்த இரு ரயில்களும் தினமும் அரை மணி நேரம் தாமதமாக வருவது இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
தினமும் சுரைமான்பூர் செல்லும் குடிமகன்கள், ரயில் டிக்கெட் வாங்குவதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.