இந்தியா

இந்தியாவுக்கு பகிரங்க சவால் விடுக்கிறது பாகிஸ்தான்: காங்கிரஸ் கருத்து

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு பகிரங்க சவால் விடுக்கும் வகையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்கிறார்.

இந்தப் பின்னணியில் இந்தியாவுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கும் வகையில் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது பேட்டியளித்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, “பிரச்சினை எல்லையில் இல்லை, டெல்லியில் ஆட்சி நடத்துபவர்களின் மனதில் உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்.

நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை வரவேற்றீர்கள், பரிசு அளித்தீர்கள், பரிசு பெற்றீர்கள். ஆனால் அதன் பின்னரும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. இப்போது நீங்கள் (மோடி) என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

இவ்வாறு ஷகீல் அகமது தெரிவித்தார்.

SCROLL FOR NEXT