இந்தியா

காஷ்மீரில் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 2ஆம் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொரு தீவிரவாதியும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. கடந்த 2ஆம் தேதி தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் அந்தக் கிளையில் அப்போதுதான் பணியில் சேர்ந்திருந்தார். அவரது படுகொலை நடந்த அதே நாளில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. காஷ்மீரி பண்டிட்டுகள் சாலைகளில் இறங்கிப் போராடினர். தங்களின் உயிருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினர். தாங்கள் ஜம்முவுக்கு இடம்பெயர விரும்புவதாகவும் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜன் முகமது லோன் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிரவாதிதான் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற நபர் என்பதும் உறுதியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதியின் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் இருவருமே லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்களாவர்.

SCROLL FOR NEXT