டெல்லியில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்தர மோடியின் 2 ஆம் வருட நிறைவு விழாவை நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து அளிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இவரது பெயர் பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் அடிபடுவதால் இது தவறான முன் செய்தியை தந்து விடும் என காங்கிரஸ் கட்சி பாஜகவை சாடியுள்ளது.
இது குறித்து இன்று மாலை காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதன் தேசிய செய்தி தொடர்பாளரான ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பிரதமர் மோடி வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை திரும்பக் கொண்டு வருவதுடன் அவர்களை தண்டிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்தநிலையில், கறுப்புப்பண விவகாரத்தில் சிக்கியுள்ள ஒருவரை வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விழா நடத்துகிறது.
ஒரு நடிகராகவும், மூத்தகுடியாகவும் அமிதாப்பச்சனை அனைவரும் விரும்புகிறோம். அவர் தன் மீதான கறுப்புபணப் புகாரில் தமக்கு சம்மந்தம் இல்லை என மறுத்துள்ளார். எனினும், தற்போது அவரை வைத்து விழா நடத்துவது தவறான செய்தியை தந்து விடும். எனத் தெரிவித்துள்ளார்.
உபியின் அலகாபாத்தை சேர்ந்த அமிதாப்பச்சனின் குடும்பம், ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்து அவருக்கு நெருக்கமானது. இதனால், காங்கிரஸ் கட்சி சார்பில் 1984-ன் மக்களவை தேர்தலுக்கு அலகாபாத்தில் போட்டியிட்டு வென்றார். பிறகு ராஜீவ் காந்தி மீது கிளம்பிய போபர்ஸ் பீரங்கி ஊழலில் தனது பெயரும் சிக்கியதால் எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். பிறகு உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர்களுடன் நட்பு வளர்ந்தது. தற்போது இதுவும் இல்லாத நிலையில் அமிதாப்பிற்கு பாஜகவுடன் நெருக்கம் வளர்ந்து வருவதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
அமிதாப் மறுப்பு
இதற்கிடையே, பிரதமர் மோடி அரசின் விழாவில் கலந்து கொள்வது குறித்து அமிதாப்பச்சன் ஒரு தனியார் செய்தி சேனலின் விழாவில் பேசியுள்ளார். இதில், அந்த நிகழ்ச்சியை தாம் நடத்தவில்லை என்றும், நடிகர் ஆர்.மாதவன் தான் தொகுத்து வழங்குகிறார் எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதன் ஒரு சிறிய பகுதியான ‘பேட்டி பச்சாவ்! பேட்டி படாவ்! நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
சர்ச்சையை கிளப்பியுள்ள பிரதமர் மோடியின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா மீதான பிரம்மாண்ட நிகழ்ச்சி டெல்லியின் இந்தியா கேட் முன்பாக மே 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.