இந்தியா

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இமயமலை பனிபரப்பு குறைகிறதா?

செய்திப்பிரிவு

டெல்லியில் கடும் வெயில் தொடருகிறது. இங்கு கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெயிலின் கடுமை அதிகரித் திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு இமயமலையின் பனிக்கட்டிப் பகுதிகளின் பரப்பளவு குறைந்து வருவதும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி டி.பி.யாதவ், ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறுகையில், “வெள்ளிக்கிழமை டெல்லி யின் பாலம் பகுதியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. இது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான வெப்பநிலையாகும். வெயிலின் கடுமை அதிகரித்து வருவதற்கு, ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியி லிருந்து வடமேற்குப் பகுதி வழியாக வீசும் வெப்பமான காற்றும், மேகங்களற்ற வானமுமே காரணம்” என்றார்.

டெல்லி மட்டுமின்றி அதை சுற்றியுள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதே நிலை, இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமயமலையில் குறையும் பனிக்கட்டி

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையைச் சேர்ந்த சிவசாகர் ஓஜா கூறுகை யில், ‘பாலஸ்தீனம், ஈரான், இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த போர்களினால் காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக, இமயமலையில் படர்ந்திருக்கும் பனிக் கட்டிகள் உருகி, ‘ஐஸ் லைன்’ பகுதிகள் குறையத் தொடங்கின. இதனால் வெயிலின் அளவு அதிகரிக்கிறது’ என்றார்.

இதேபோல் தமிழகத்திலும் அக்னிநட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.

SCROLL FOR NEXT