இந்தியா

சென்ட்ரல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: அசாமில் வெடிக்க வேண்டிய குண்டு சென்னையில் வெடித்து விட்டது - கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் வெடிக்க வேண்டிய குண்டு சென்னை சென்ட்ரலில் தவறுதலாக வெடித்து விட்டதாக கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ம் தேதி பெங்களூரு-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. சிறிது நேரத்தில் அந்த ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி(24) பலியானார். 14 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு

வெடிப்பு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜாகிர், ஷேக் மெகபூப், அம்ஜத் கான் ஆகிய 3 பேரை மத்திய பிரதேச போலீஸார் ஒடிசாவில் கைது செய்தனர். விசாரணையில் இவர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் மத்திய பிரதேசம் சென்று 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், "வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் அகதிகளாக நுழையும் முஸ்லிம்கள் மீது அசாம் பழங்குடியினர் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே அந்த மாநில மக்களை பழிவாங்க அஸ்ஸாம் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைத்தோம். ஆனால் தொழில்நுட்ப கோளாறால் அது சென்னையிலேயே வெடித்து விட்டது" என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 3 பேரையும் சென்னை அழைத்து வருவதற்கான முயற்சியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT