இந்தியா

2 நாட்களில் 400 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டே - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு

செய்திப்பிரிவு

மும்பை: நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை செயல்படுவது வழக்கம். சில நாட்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரவு வரை செயல்படுவதும் உண்டு. ஆனால் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே கடந்த 9-ம் தேதி 190 வழக்குகளையும் 10-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரித்துள்ளார்.

இந்த 2 நாட்களிலும் அவர் காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பணிபுரிந்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில், “மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷிண்டே 9-ம் தேதி 190 வழக்குகளை விசாரித்ததாக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்” என பதிவிட்டுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் 3-வது மூத்த நீதிபதியாக உள்ள ஷிண்டே, விரைவில் ஓய்வுபெற உள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு இவரது பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

எல்கர் பரிஷத், ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் உட்பட பல முக்கிய வழக்குகளுக்கு ஷிண்டே தலைமை வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT