இந்தியாவில் புல்லட் ரயில் கனவை நனவாக்குவதன் ஒரு பகுதியாக, ஸ்பானிஷ் டால்கோ ரயில் பெட்டிகளை சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக இந்திய ரயில்வே இயக்கிப் பார்த்துள்ளது.
இஸாட் நகர்-போஜிபுரா இடையே இந்த சோதனை ஓட்டம் நடந்துள்ளது. டால்கோ சொகுசு பெட்டிகளை இந்திய ரயில் இன்ஜின் இழுத்துச் சென்றது.
“இந்த சொகுசு பெட்டிகளை டால்கோ 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. தஜிகிஸ்தான் உட்பட 12 நாடுகளில் வெற்றி கரமாக முயற்சித்துப் பார்க்கப் பட்டுள்ளது.
இந்த பெட்டிகளில் ஏராளமான சென்சார்கள் உள்ளன. இவை சரியாக இயங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க, ரயில்வே வாரியத்தின் மெக்கானிகல் இன்ஜினியர் சோதனை ஓட்டத்துக்கு உத்தரவிட்டார்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பெட்டிகளின் வேகம் இன்று பரேலி-மொரதாபாத் இடையே பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது. வரும் ஜூன் 12 வரை சோதனை ஓட்டம் தொடரும். மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் இவை செல்லும்.
மதுரா-பல்வால் இடையே நடக்கும் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ, வேகத்தை இவை எட்டும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
மேலும், புதுடெல்லி- மும்பை பாதையில் மணிக்கு 200 முதல் 220 கி.மீ. வேகத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.