வங்கதேச எல்லையில் வசித்து வந்த 15 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக அவர்கள் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்தியா வங்கதேசம் இடையே கடந்த ஆண்டு எல்லை பகுதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மேற்குவங்க மாநிலத்தை யொட்டிய 51 பகுதிகள் இந்தியா வசம் சேர்க்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்திய குடிமக்களாக அறிவிக் கப்பட்டனர். அவர்களில் 10,000 பேருக்கு தற்போது வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா வங்கதேச எல்லை பரிமாற்ற கூட்டமைப்பு குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திப்திமன் சென்குப்தா கூறும்போது, ‘‘பிரிக் கப்படாத பகுதியில் வசித்து வந்த 15,000 பேருக்கு நீண்ட போராட்டத் துக்கு பின் இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. அவர்களில் வாக்குரிமை பெற்ற 9,776 பேர் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்’’ என்றார்.
முதல் முறையாக வாக்குரிமை பெற்ற ஜாய்னல் அபேதின் (24) என்பவர் கூறும்போது, ‘‘சாலை வசதி, கட்டிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் எங்கள் பகுதிகளில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேர்தல் விருப்பம். இத்தனை ஆண்டுகளாக தேர்தலை நேரில் கண்டிருக்கிறோமோ தவிர, ஒருமுறை கூட வாக்களித்தது இல்லை.
தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தவிர ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினரும் ஒரே நேரத்தில் வாக்களிக்கப் போகிறோம் என்பது தான் சுவாரசியம்’’ என்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக வங்கதேசத்துடன் எல்லைப் பகுதிகள் பரிமாற்ற விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்வு காணப்பட்டது.
அதன்படி இந்தியாவின் எல்லை அருகே 111 தொகுப்பாக இருந்த 17,160 ஏக்கர் நிலப்பரப்பு வங்கதேச எல்லையாகவும், வங்கதேச எல்லை அருகே 51 தொகுப்பாக இருந்த 7,110 ஏக்கர் நிலப்பரப்பு இந்திய எல்லையாகவும் பரஸ்பரம் பரிமாறப்பட்டது.
இந்த 51 தொகுப்பு நிலங் களும் மேற்குவங்க மாநிலத் தின் தின்ஹதா, மேக்கிலகன்ஞ், சித்தாய், சிதால்குச்சி மற்றும் தூபாங்கன்ஞ் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.