நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017-ல் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர் அனுாப் சந்திர பாண்டே ஆகியோர் டெல்லியில் நேற்று வெளியிட்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை டெல்லியில் ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை தலைமைச் செயலர் பிரமோத் சந்திர மோடி செயல்படுவார் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடப்பது எப்படி?
இத்தேர்தல் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,033 எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 4,809 வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பர்.
நியமன எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் இதில் கலந்துகொள்ள முடியாது. இதில் எந்தக் கட்சியும், தனது உறுப்பினர்களுக்கு கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700-ஆக இருக்கும். இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431-ஆக இருக்கும்.
வாக்குச்சீட்டில் உள்ள வேட்பாளரின் பெயருக்கு நேராக, வேட்பாளர்களின் தேர்வை வாக்காளர்கள் குறிப்பிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜக, காங். உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளரோ அல்லது அவரது சார்பில் மற்றவர்களோ குறிப்பிட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 வரை தாக்கல் செய்யலாம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் விவரம்: