இந்தியா

சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மூத்த தலைவர்கள் அறிவுரை

செய்திப்பிரிவு

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கி யுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மக்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கான பயிற்சி முகாம் டெல்லி அருகேயுள்ள சுரஜ்கண்டில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த முகாமில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.

முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் பேசினர்.

2-வது நாளான ஞாயிற்றுக் கிழமை ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் சுரேஷ் சோனி பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத் துவது குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கினர். பியூஷ் கோயல் பேசியபோது, இன்றைய உலகில் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவற்றின் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் பரப்ப வேண்டும், அனைத்து எம்.பி.க்களும் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரகாஷ் ஜவடேகர் பேசிய போது, சமூகவலைத் தளங்களை எம்.பி.க்கள் கவனமாகக் கையாள வேண்டும், கட்சிக்குள் எழும் கருத்துவேறுபாடுகளை அதில் பதிவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நிறைவுரையாற்றினார்.

SCROLL FOR NEXT