உலகிலேயே தலைசிறந்த பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் மோடி அரசின் 2 ஆண்டு கால ஆட்சி குறித்து செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசிய போது ரகுராம் ராஜன் குறித்து புகழ்ந்து பேசினார்.
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் சிறப்பானவரை ஆர்பிஐ கவர்னர் பொறுப்பிற்கு நியமித்துள்ளது. அப்போதும், இப்போதும் நாங்கள் அவர் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஆனால், ரகுராம் ராஜன் போன்ற ஒருவரைப் பெற தற்போதைய அரசு தகுதியுடையதுதானா என்று இப்போது நான் எண்ணத் தொடங்கியுள்ளேன்” என்றார்.
ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியை கிட்டத்தட்ட புறக்கணித்த ப.சிதம்பரம், பிரதமரோ, நிதியமைச்சரோ ரகுராம் ராஜன் பற்றி கருத்து கூறினால் மட்டுமே காங்கிரஸ் பதில் அளிக்கும் என்பதை வலியுறுத்தினார்.
“உலகெங்கிலும் நிதியமைச்சரும் மத்திய வங்கி கவர்னரும் கலந்தாலோசனையில் ஈடுபடுவது வழக்கம்தான், இதனால், நிதியமைச்சர் ஒருவர் ஆர்பிஐ கவர்னரின் திறமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று பொருளல்ல. இருவருமே வெவ்வேறு பார்வையிலிருந்து பொருளாதாரத்தை அணுகுபவர்கள். அரசின் பார்வை வளர்ச்சி, மத்திய வங்கியின் பார்வை நிதிநிலைமை உறுதிப்பாடு” என்றார் ப.சிதம்பரம்