இந்தியா

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியா உதயம் - ஹர்ஷ்வர்தன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியின் சிறந்த தலைமை பண்பு காரணமாக இந்தியர்களிடையே நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள், நலிவுற்றோர் வாழ்வின் முன்னேற்றத்துக்காக பிரதமர் அயராது பாடுபட்டு வருகிறார். மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வரையறுத்து செயல்படுத்துகிறார்.

அவரது தொலைநோக்கு பார்வைதிட்டங்களில் 135 கோடி மக்களும் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சர்வதேச அரங்கில் இந்தியாவை 3-ம் நிலை நாடாகவே கருதிவந்தனர். பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். வரும் 2030-ம் ஆண்டில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT