பிரதமர் நரேந்தர மோடியின் சான்றிதழ் கோப்புகளை தயாராக வைக்கும்படியும், அதை காண தாம் நேரில் வர விரும்புவதாகக் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
இதற்கான நேரம் கேட்டு அவர் டெல்லி பல்கலைகழகத் துணைவேந்தருக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி பயின்ற விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சனை கிளப்பி வருகின்றனர்.
இதை அடுத்து பாஜக சார்பில் பிரதமர் மோடியின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களுக்கான சான்றிதழ்களின் நகல் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் பிறகும் சான்றிதழ் விவகாரம் முடிவிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில், பிரதமரின் சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி பல்கலைழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை சந்திக்க நேரம் கேட்டு அம் மாநில துணை முதல் அமைச்சரான மணிஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
சிசோடியாவின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அடுத்த வாரத்தில் ஒருநாள் தங்களுக்கு தோதுவான நேரத்தில் பிரதமர் நரேந்தர மோடியின் சான்றிதழ் சம்மந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் தயாராக வைக்கவும். இதை நான் நேரில் வந்து சரிபார்த்து இருவரும் இணைந்து ஒரு பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி, உண்மையை பொதுமக்கள் முன் வைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பிரதமரின் சான்றிதழ் விவரம் அனைத்தையும் பக்லைகழக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.
ஒருவேளை இதில் பிரதமருக்கு ஆட்சேபம் இருக்கும் எனில், இதற்காக அவரிடம் அனுமதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சான்றிதழ் மீதான விவரங்கள் கேட்கப்படும் போது அளிக்காமல் மறைத்தால் அதில் தவறு உள்ளது என்பது போலாகி விடும். எனவே, பிரதமரின் சான்றிதழ் மீதான விவாதிக்கு முன் வரவும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பல்கலையில் மோடியின் இளநிலை பட்டப்படிப்பு குறித்த விவரங்களை தகவல் உரிமை சட்டம் மூலமாக கேட்கப்பட்டதை அடுத்து சர்ச்சைகள் கிளம்பின.