புதிய ஆந்திர சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. ஆந்திர அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இல்லாத அவையாக இது அமைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டை யாக விளங்கிய ஆந்திர மாநிலத் தில், மாநில பிரிவினையால் இக்கட்சி புதிய ஆந்திர மாநிலத்தில் தனது செல்வாக்கை முழுவதும் இழந்தது. நடந்து முடிந்த சட்ட மன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் களில் சீமாந்திரா பகுதியில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில், 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. இக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இதன் தோழமைக் கட்சியான பாஜக 4 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சியைப் பிடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றது. மீதமுள்ள 2 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் ஒருவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். ஆதலால், ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இன்றி புதிய ஆந்திர சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள பழைய சட்டமன்ற அரங்கில் கூடியது. காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த அவையில் இடம் பெறவில்லை. வெறும் மூன்று கட்சிகள் மட்டுமே இம்முறை அவையில் இடம் பிடித்துள்ளன.
முன்னதாக, லேக் வியூ பகுதியில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆர். சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் இருந்தனர். பின்னர் இவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றனர்.
இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி யும், அவரது 67 எம்.எல்.ஏ. க்களும் கட்சி அலுவலகத்திலிருந்து ஒரே பஸ்ஸில் புறப்பட்டனர். இவர்கள் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு அவைக்கு சென்றனர்.
முதலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், மகளிர் உறுப்பினர் கள், ஆண் உறுப்பினர்கள் என அடுத்தடுத்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஜெகன் மோகன் ரெட்டியும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துகளை பிரிமாறிக்கொண்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின் முதல்நாளில், இறந்த உறுப்பினர் களான ஷோபா நாகிரெட்டி, பிரபாகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. மூன்றாவது நாள் ஆளுநர் உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு நாட்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.