கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
கேரள சட்டப்பேரவையின் 140 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்பத்தில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.
கன்னூரில் அதிகபட்ச வாக்குகளும், திருவனந்தபுரத்தில் குறைந்தபட்ச வாக்குகளும் பதிவாகின. மாலை 3 மணி நிலவரப்படி திருவனந்தபுரத்தில் 44.93 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. மாலை 5.30 மணிக்கு இந்த எண்ணிக்கை 67.77 சதவீதமாக உயர்ந்திருந்தது.
கன்னூரில் மாலை 5.30 மணி நிலவரப்படி 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்குப் பிறகும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இத்தேர்தலில் மொத்தம் 109 பெண்கள் உட்பட 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.61 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. தவிர, மக்களவைத் தேர்தல் பின்னடைவிலிருந்து தேசிய அளவில் மீள்வதற்கான வாய்ப்பாக இத்தேர்தலை காங்கிரஸ் கருதுகிறது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மீண்டும் தங்களை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது.
பாஜக கேரளாவில் தனது முதல் சட்டப் பேரவைத் தொகுதியை வெல்லும் முனைப்பில் உள்ளது.
காங்கிரஸ் 87 தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 24, கேரள காங்கிரஸ் (எம்) 15, புரட்சிகர சோஷலிச கட்சி 5, ஐக்கிய ஜனதா தளம் 7, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி 1, கே.சி (ஜெ) 1 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் 92, இந்திய கம்யூனிஸ்ட் 27, மதச்சார்பற்ற ஜனதா தளம் 5, தேசியவாத காங்கிரஸ் 4, காங்கிரஸ் 1, ஜனநாயக கேரள காங்கிரஸ் 4, இந்திய தேசிய லீக் 3, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், கேரள காங்கிரஸ் (சைரிக்), கேரள காங்கிரஸ் (பி), ஆர்எஸ்பி (எல்) தலா ஒரு இடங்களில் போட்டியிடுகின்றன.
பாஜ கூட்டணியில் பாஜக 97 இடங்களிலும், பாரத் தர்ம ஜன சேனை 37 இடங்களிலும் 6 இடங்களில் சிறு கட்சிகளும் போட்டியிடுகின்றன.