இந்தியா

பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை வேண்டும்: அமிதாப் வலியுறுத்தல்

ஐஏஎன்எஸ்

‘குடும்பங்களில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு இணையாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு சம உரிமையும், கல்வியும் வழங்கப்பட வேண்டும்’ என, நடிகர் அமிதாப்பச்சன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டம் தொடர்பான பிரச்சார நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார். அப்போது, அவர் கூறும்போது, ‘‘ஒரு குடும்பத்தில் மகன் மற்றும் மகளுக்கு இடையே எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. இருவருமே குடும்பத்தின் சொத்து எனக் கருதி, சமமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டும்.

பெண்களே உயர்ந்த சக்தி படைத்தவர்கள் என மகாத்மா காந்தி எப்போதும் கூறுவார். பெண்களின் உள்மன ஆற்றலுடன் எந்த மனிதனாலும் போட்டியிட்டு வெல்லமுடியாது. எனவே, பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்களை ஊக்கப்படுத்துவோம்.

ஒரு சமூகம் மேம்பட பெண்களுக்கு சம உரிமையும், கல்வியும் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்தாலே சமூக முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறும் மத்திய அரசு, ‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்ற அமிதாப்பச்சனை அரசு திட்டத்துக்காக பயன்படுத்துவதை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT