மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மே 31) நிறைவு பெறுகிறது. மாநிலங்களவையில் 57 உறுப் பினர் பதவிகள் காலியாகின்றன. மொத்தம் 15 மாநிலங்களில் காலி யாகும் இந்தப் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.
பாட்னா
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) கட்சியின் 5 உறுப்பினர்கள் ஜூலை மாதம் ஓய்வுபெறுகின்றனர். அங்கு தற்போதுள்ள நிலவரப்படி ஐஜத கட்சிக்கு 2 உறுப்பினர்கள், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு 2 உறுப்பினர்களும், பாஜகவுக்கு ஓர் உறுப்பினரும் கிடைப்பார்கள்.
இந்நிலையில் பிஹாரில் ஐஜத சார்பில் அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சரத் யாதவ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவருமான ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோரும், ஆர்ஜேடி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி ஆகியோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பிஹாரில் பாஜக சார்பில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கோபால் நாராயண் சிங் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தேசிய துணைத் தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர், ராம்குமார் வர்மா, ஹர்ஷவர்தன் சிங் ஆகிய 4 பேரும் ஜெய்ப்பூரில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
மத்திய இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சண்டீகர்
மாநிலங்களவைக்கு 2014-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹரியாணாவில் இருந்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் வீரேந்தர் சிங் சண்டீகரில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பஞ்சாபில் இருந்து காலியாகும் இடத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி வேட்புமனு தாக்கல் செய்தார்.
போபால்
மத்தியப் பிரதேசம் சார்பில் மாநிலங்களவையில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 2-ல் பாஜகவும் 1-ல் காங்கிரஸும் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் விவேக் தங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் வியாபம் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டவர் ஆவார்.
லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
புவனேஸ்வரம்
ஒடிசாவில் இருந்து 3 மாநிலங் களவை உறுப்பினர்கள் பதவிகள் ஜூலை 1-ம் தேதி காலியாகின்றன. இந்த 3 இடங்களுக்கும் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பிஜேடி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசன்ன ஆச்சார்யா, விஷ்ணு தாஸ், என். பாஸ்கர் ராவ் ஆகியோர் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் நாளை (ஜூன் 1) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற ஜூன் 3 கடைசி நாளாகும். போட்டி நிலவும் மாநிலங்களில் மட்டும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும்.