மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கோபிநாத் பி.முண்டே, டெல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.
முண்டே மரணமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மகாராஷ்டிரத்திலிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. இக்கோரிக்கையை பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து சிபிஐ விசாரணை தொடர்பாக பேசினார்.
அவருடன், மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் தேவேந்திர பதான்விசும் சென்றிருந்தார். இவர்களிடம் கோபிநாத் முண்டே மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என்று அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலை விபத்தில் முண்டே மரணமடைந்து ஒரு வாரம் ஆன பின்பும், அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்த விபத்து தொடர்பாக சந்தேகம் தெரிவித்த சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, சிபிஐ விசாரணைக்கு கோரியிருந்தார்.
பாஜக தலைவர்களால் அவமானப்படுத்தப்பட்ட முண்டே, கட்சியில் இருந்து விலக நினைத்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர் பாண்டுரங்க புந்த்கரும் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 3-ம் தேதி மும்பை செல்வதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு காரின் பின்புற இருக்கையில் அமர்ந்து முண்டே பயணம் செய்தார். கார், லோதி சாலையில் உள்ள அரபிந்தோ சௌக் சிக்னலை தாண்டிய போது, மற்றொரு சாலையில் இருந்து வந்த கார் மோதியதில் கோபிநாத் முண்டே உயிரிழந்தார். ஆனால், முண்டேயின் கார் ஓட்டுநர் விரேந்தர் குமார் மற்றும் முன்புறம் அமர்ந்திருந்த உதவியாளர் சுரேந்தர் நாயர் ஆகியோருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குருவீந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
கோபிநாத் முண்டேவை விபத்தின் மூலம் கொல்வதற்கு சதி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், சதி ஏதும் இல்லை என்று தெரியவந்ததும், ஓட்டுநர் குருவீந்தர் சிங்கை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.