ஆண்டனி பூலா 
இந்தியா

முதல் பட்டியலின கார்டினல் - இந்தியாவில் இருந்து தேர்வான பாதிரியார் ஆண்டனி பூலா

செய்திப்பிரிவு

வாட்டிகன்/ ஹைதராபாத்: இரண்டு இந்தியர்கள் உள்பட 21 புதிய கார்டினல்களின் பெயரை போப் பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலியில் உள்ள வாட்டிகன் நகரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் தேர்தல் ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நடைபெறும் என்றும் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

கார்டினல்களாக தேர்வாகியுள்ள இரு இந்தியர்களில் ஒருவர் கோவா மற்றும் டாமன் கத்தோலிக்க திருச்சபைகள் பங்கைச் சேர்ந்த பேராயர் பிலிப் நெரி ஆண்டோனியோ செபாஸ்டினோ டி ரொசாரியா ஃபெராவ். மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராயர் ஆண்டனி பூலா.

புதிதாக தேர்வு செய்யப்படப்போகும் 21 கார்டினல்களில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 6 பேர். 8 பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். 2 பேர் ஆப்பிரிக்காவையும், ஒருவர் வட அமெரிக்காவையும், 4 பேர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவின் முதல் பட்டியலின கார்டினல்: ஆண்டனி பூலாவுக்கு இப்போது 60 வயதாகிறது. இவர் முதன்முதலில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரில் கர்ணூல் பேராயராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஹைதராபாத் தலைமை பேராயராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவிலிருந்து கார்டினல் அந்தஸ்து பெரும் முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமையை பெறுகிறார் ஆண்டனி பூலா.
இது குறித்து தெலுங்கு கத்தோலிக்க பேராயர் கவுன்சிலின் துணைச் செயலாளர் ஜோசப் அர்லகடா அளித்த பேட்டியில், "ஆண்டனி பூலாவை கார்டினலாக தேர்வு செய்துள்ளது பெருமையளிக்கிறது. கடவுளின் கிருபையால் இது நடந்துள்ளது. தேவாலயப் பணிகளில் ஆண்டனி காட்டிய அர்ப்பணிப்பும் இதற்குக் காரணம். அவருக்கு தேவாலயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள் உண்டு. அவர் கடின உழைப்பாளி. ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் அனைவரும் இதனைக் கொண்டாடுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

கோவா பேராயருக்கு முதல்வர் பாராட்டு: கோவா மாநிலத்திலிருந்து கார்டினலாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராயர் ஃபிலிப் நெரி ஃபெராரோவுக்கு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT