புதுடெல்லி: ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:
உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் போன்ற தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டை தகவல்களை வாங்கவோ, அதன் நகல்களை எடுக்கவோ அனுமதி கிடையாது. ஆதார் சட்டம் 2016-இன் படி அது குற்றம். ஆதார் அட்டையைப் பார்க்க வேண்டும் அல்லது அதன் நகல் வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கோரினால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்த உரிய பயனாளர் உரிமம் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
ஆதார் அட்டை நகலை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, பயனாளர்கள் கடைசி 4 எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பொது இடங்களில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பதிவிறக்கம் செய்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை கணினியிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் அட்டையின் கடைசி 4 எண்களை மட்டுமே காண்பிக்கும் வகையிலான ஆதார் அட்டையை https://myaadhaar.uidai.gov.in/ இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில்
ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் என விளக்கமளித்துள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
பத்திரிகை செய்தியை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.