இந்தியா

மகாராஷ்டிராவில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: ராணுவத்தினர் 17 பேர் பலி

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின் புல்காவ் பகுதியில் உள்ள ராணுவத்தின் மத்திய வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அதிகாரிகள் இருவர் உட்பட 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்தத் துயர விபத்து செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்பு 1.30 மணியில் இருந்து 2.00 மணி வரை ஏற்பட்டது.

பயங்கர தீ விபத்தில் சிக்கிய அதிகாரிகள் இருவரும், 17 ராணுவ பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இரண்டு அதிகாரிகள், 17 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிபொருள் கிடங்கின் ஒரு பகுதியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், முழுமையான சேத விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டும் கிடங்குகளில் புல்காவ் கிடங்கு மிக முக்கியமானது. உலக அளவிலான மிகப் பெரிய கிடங்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT