‘உலகெங்கும் உள்ள இந்திய தூதர்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து செயல்படவேண்டும்’ என, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்களின் வருடாந்திர கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. சுமார், 120-க்கும் அதிகமான இந்திய தூதர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பிரதான முன்னுரிமை அளித்து தூதர்கள் செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தியதாக, வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், ‘இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கைகளின் நோக் கத்தை புரிந்து கொள்ள இம் மாநாடு சிறந்த வாய்ப்பாக அமைந் தது’ என, வெளியுறவுத் துறை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாகவும், விகாஸ் ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார்.