கர்நாடக பியூசி வேதியியல் தேர்வு வினாத்தாளை 2 முறை கசிய விட்ட முக்கிய தரகரை சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த மார்ச் மாதம் பியூசி (12-ம் வகுப்பு) பொது தேர்வு நடைபெற்றது. மார்ச் 21-ம் தேதி வேதியியல் தேர்வு நடப்பதற்கு முன்பாக வினாத்தாள் கசிந்தது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அப்போதும் வினாத்தாள் கசிந்ததால், 2-வது முறையாக தேர்வு ரத்தானது. இதனால் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
வினாத்தாள் கசிந்தது தொடர் பாக கர்நாடக சிஐடி போலீஸார் விசாரணை நடத்தியதில் சிவகுமாரையா என்ற முக்கிய தரகர், உயர்கல்வி துறை அமைச்சரின் உதவியாளர் மற்றும் தனியார் பள்ளியின் தாளாளர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சூழலில் போலீஸார் தங்களை நெருங்கி வருவதை தெரிந்து கொண்ட குற்றவாளிகள் உடனடியாக தலைமறைவாகினர். இதையடுத்து மாநிலம் முழுவதும் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சிஐடி போலீஸார் ஓசூர் சாலையில் உள்ள கார்வேபாவி பாளையா என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவாகுமாரையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன், லேப்டாப், டேப்லட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கர்நாடக டிஜிபி கிஷோர் கூறுகையில், '' கடந்த 2005-ம் ஆண்டு பியூசி தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவத்திலும் சிவகுமாரையா தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தியதில், நடப்பாண்டு வேதியியல் வினாத் தாளை இரு முறை கசிய விட்டதை ஒப்புக்கொண்டார். இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள சி.இ.டி தேர்வு வினாத்தாளையும் கசிய விட அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளார். அதற்கு முன்னதாக சிவகுமாரையாவை கைது செய்ததன் மூலம், சி.இ.டி. வினாத்தாள் கசிவு தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சதி திட்டத்தில் அவரது மகன் தினேஷ், உறவினர் கிரண் ஆகியோரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள அனை வரும் விரைவில் கைது செய்யப் படுவார்கள்'' என்றார்.