இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரம் கூறுகிறது. இந்நிலையில் நம் நாட்டில் மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, மருத்துவர்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை தனது ஆட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் பேசும்போது, “நாடு முழுவதிலும் அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 60 அல்லது 62 ஆக உள்ளது. இது 65 ஆக உயர்த்தப்படும்” என்றார்.
நம் நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு 7 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தனியார் நிறுவன புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப நம் நாட்டுக்கு 50,000 சிறப்பு மருத்துவர்கள் தேவை. ஆனால் தற்போது 8,350 பேர் மட்டுமே உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு, மார்ச் 31-ம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டில் உள்ள 25,300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 சதவீத மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. இத்துடன் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் லேப் டெக்னீஷியன்கள் 36 சதவீதமும், மருந்தாளுநர்கள் 22 சதவீதமும் பற்றாக்குறை உள்ளது. பெண் உதவியாளர் பணியிடங்கள் சுமார் 50 சதவீதமும் ஆண் உதவியாளர் பணியிடங்கள் 61 சதவீதமும் நிரப்பப்படாமல் உள்ளன. பொது சுகாதர நிலையங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 83 சதவீதம், மகப்பேறு மருத்துவர்கள் 76 சதவீதம், பொது மருத்துவர்கள் 83 சதவீதம், குழந்தை நல மருத்துவர்கள் 82 சதவீதம் பற்றாக்குறை உள்ளது.
இந்த புள்ளிவிவரப்படி தற்போது நாடு முழுவதிலும் சுமார் ஆறரை லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். இந்நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 4 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50,000, பொது சுகாதார நிலையங்களில் 80,000, இதன் 5,642 கிளை நிலையங்களில் 1.1 லட்சம், மருத்துவக் கல்லூரிகளில் 50,000 என மருத்துவர்களின் தேவை உள்ளது.
நம் நாட்டின் மக்கள் தொகை ஆண்டுக்கு சராசரியாக 3.3 சதவீதம் உயர்ந்து வருகிறது. இதற்கு ஏற்றவாறு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 410 உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுமார் 50,000 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மூத்த மருத்துவர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் நாட்டின் பல்வேறு நகரங்களில் புதிதாக நிர்மாணிக்கபட்டு வரும் ‘எய்ம்ஸ்’ போன்ற சிறப்பு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் என கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் அறிவிப்பை இந்திய மருத்துவர்கள் சங்க தேசிய தலைவர் எஸ்.எஸ்.அகர்வால், தேசிய பொதுச் செயலாளர் கே.கே.அகர்வால் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இந்த அறிவிப்பால் கிராமப்புற மக்கள் பலன் அடைவார்கள் என்று கூறியுள்ளனர்.