ஜாட்கள் மற்றும் 5 பிற சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஹரியாணா மாநில முடிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஜாட்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள், முஸ்லிம் ஜாட்கள், பிஷ்னாய் பிரிவினர், ரோர்கள், த்யாகி பிரிவினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
ஹரியாணா பிற்படுத்தப்பட்டோர் சட்டம், 2016- அரசமைப்பு சட்ட ரீதியாக செல்லுபடியானதுதானா என்று கேள்வி எழுப்பிய மனு ஒன்றின் மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் ஜாட்கள் மற்றும் பிற 5 சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
பிவானியைச் சேர்ந்த முராரி லால் குப்தா என்பவர் செய்திருந்த மனுவில், ஹரியாணா பிற்படுத்தப்பட்டோர் சட்டத்தின் பிளாக் சி பிரிவை ரத்து செய்ய வழிமுறை கோரி விண்ணப்பித்திருந்தார்.
அதாவது, புதிய சட்டத்தின் கீழ் ஜாட்கள் மற்றும் பிற 5 சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவு உண்மையில் கே.சி.குப்தா என்பவரது கமிஷன் அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட முடிவாகும், ஆனால் அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது என்று தன் மனுவில் முராரி லால் குப்தா குறிப்பிட்டிருந்தார்.
எனவே, உச்ச நீதிமன்றம் நிராகரித்த கமிஷன் அறிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இவ்வாறு செய்ய முடியாது என்று முராரி லால் குப்தா வாதிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் ஜாட்கள் சமூக, கல்வியியல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் அல்ல என்று கூறியதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியதையடுத்து நீதிபதி எஸ்.எஸ்.சரோன் தலைமையிலான அமர்வு ஜாட்கள் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.