இந்தியா

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ரபேல் போர் விமானங்களுக்கு விலையை குறைத்தது பிரான்ஸ்

செய்திப்பிரிவு

இந்திய பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 126 விமானங்கள் வாங்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலை யில், மோடி அரசு பதவியேற்ற பின்னர், 36 விமானங்கள் மட்டும் வாங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பிரான்ஸ் நிறுவனம் 36 விமானங்களுக்கு 8.8 பில்லியன் யூரோ விலை நிர்ணயம் செய்தது. இந்த தொகை அதிகம் என்று மத்திய அரசு கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதை யடுத்து பிரான்ஸ் அமைச்சர் - இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அள விலான பேச்சுவார்த்தை நடந்தது.

எனினும், விலை நிர்ணயத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இந்நிலையில், 8.8 பில்லியன் யூரோவில் இருந்து இப்போது 7.25 பில்லியன் யூரோவாக குறைத்து விமானங்களை விற்க பிரான்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும், இதற்கு மேல் விலை குறைக்க முடியாது என்று பிரான்ஸ் கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் குறிப்பிட்டுள்ள விலை மிகவும் குறைவு என்பதால் மோடி அரசுக்கு வெற்றி கிட்டியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், ரபேல் போர் விமானங்களை 5 ஆண்டுகள் பராமரித்தல், கூடுதலாக ரபேல் போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரித்தல் போன்ற அம்சங்களும் ஒப்பந்தத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT