மத்திய மோட்டார் வாகன சட்டம் - 1988-ல் தேவையான மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சாலை போக்குவரத்தை மீறு பவர்கள், போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க அமைச்சர்கள் குழு பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. இந்நிலையில், நாட்டில் 3-ல் ஒரு ஓட்டுநர் உரிமம் போலியானதாக உள்ளது.
இதைத் தடுக்க விரைவில் மத்திய அரசு புது மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். (தற்போது அதிகபட்சமாக 3 மாத சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.)
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி படுகாயம், உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். அதன் படி 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் வாகன பதிவும் ரத்து செய்யப்படும்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறு வனத்துக்கு மத்திய போக்குவரத் துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஓட்டுநர் உரிமங்களில் 30% போலி என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு 5 கோடி பேர் வாகனங்களை ஓட்டுகின்றனர். எனவே, ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் சோதனை நடத்தும் திட்டத்தை ஆன்லைனில் தொடங்க உள்ளோம்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என யாராக இருந்தாலும் ஓட்டுநர் உரிமம் பெற அந்த சோதனையில் பங்கேற்க வேண்டும். இந்த திட்டம் மிகமிக வெளிப்படையாக இருக்கும்.
சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான மசோதா, இந்திய சாலைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும். ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதை தடுக்க மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டம், ஓட்டுநர் உரிமம் பெறுவது முதல் போக்குவரத்து நடைமுறைகள் அனைத்திலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். மேலும், 5000 ஓட்டுநர் மையங்கள் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.
ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் யூனுஸ்கான் தலைமையிலான அமைச்சர்கள் குழு, தனது முதல்கட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடும் தண் டனை, அபராதம் விதிக்க பரிந் துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதி அறிக்கையை அமைச் சர்கள் குழு சமர்ப்பிக்க உள்ளது. அதன்பிறகு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.