இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு மூவரை பரிந்துரை செய்தது கொலீஜியம்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக் குழுவான கொலீஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூன்று நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அஜய் மாணிக்ராவ் கன்வில்கர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் ஆகிய மூன்று நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

கொலீஜியம் பரிந்துரை தங்களுக்கு கிடைத்துவிட்டதாக மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 மாத இடைவெளிக்குப் பிறகு...

கொலீஜியம் 15 மாத இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூவரை பரிந்துரைத்துள்ளது. கடைசியாக கடந்த 2015 பிப்ரவரி மாதம் கொலீஜியம் முறைப்படி அமிதவா ராய் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலீஜியம் பரிந்துரைப்படி மூன்று நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 25-ல் இருந்து 28 ஆக அதிகரிக்கும்.

இந்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலிபுல்லா, கோபால கவுடா, நாகப்பன், ஏ.ஆர்.தவே, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய நீதிபதிகள் நியமனம் வேலைப் பளுவை குறைக்க மிக அவசியமானதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT