இந்தியா

உபி.யில் புழுதி புயலுக்கு 5 பேர் பலி

ஐஏஎன்எஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் திடீரென புழுதிப் புயல் வீசியதில் வீட்டுச் சுவர்கள், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் திடீரென புழுதிப் புயல் வீசியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. எனினும் அம்மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் மற்றும் வீட்டுச் சுவர்களும் இடிந்து விழுந்ததில் சம்பல், ஹர்தோய், உன்னாவ் மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலில் அமைந்துள்ள மிகப் பெரிய மரம் ஒன்றும் இந்த புழுதிப் புயலில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்தது. மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே ரயில்வே மின் வயர்கள் அறுந்து விழுந்ததால், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல் மகசூலுக்கு தயாராக இருந்த மாமரங்களையும் புழுதிப் புயல் பதம் பார்த்ததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து சுல்தான்புர் உள்ளிட்ட மாவட்டங்களில் 4.6 மீ.மீட்டர் அளவுக்கு கனமழையும் பெய்தது.

SCROLL FOR NEXT