இந்தியா

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அளித்த வீரர் கைது

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். ராணுவ வீரரான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார். கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 18-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி இவரிடம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடமிருந்து பிரதீப் குமாருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. டெல்லியில் சந்தித்துப் பேசலாம் என்று காதலுடன் பேசியும், திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகக் கூறியும் முக்கியத் தகவல்களை அந்த பெண் பிரதீப் குமாரிடமிருந்து பெற்றுள்ளார். பிரதீப் குமார் மீது அரசு ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT