இந்தியா

கேரள முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்; அமைச்சரவையில் 13 புதுமுகங்கள்

செய்திப்பிரிவு

கேரள முதல்வராக பினராயி விஜயன் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 19 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு பெண்கள் உட்பட 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 140 இடங்களில் 91 இடங்களை வென்று பெரும் பான்மை பெற்றது. முதுபெரும் அரசியல்வாதி வி.எஸ். அச்சுதானந் தனை பின்னுக்குத் தள்ளி, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பினராயி விஜயன்.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் பினராயி விஜயனுக்கு ஆளுநர் பி.சதாசிவம் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த பினராயி விஜயன் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். மலையாளத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட விஜயன் கேரளாவின் 12-வது முதல்வர் ஆவார்.

அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு முதல்வர் உட்பட 12 அமைச்சர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4, தேசி யவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்(எஸ்) கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள் உட்பட 13 புதுமுகங்களுக்கு அமைச்சரவை யில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 5 பேர், முந்தைய இடதுசாரி ஜனநா யக முன்னணி அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்.

நிகழ்ச்சியையொட்டி, 30 ஆயிரம் பேர் அமரும் அளவுக்கு பந்தல் போடப்பட்டிருந்தது. ரகசிய கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது லேசான மழைப்பொழிவு இருந்தது.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடா, முன்னாள் முதல்வர் கள் உம்மன் சாண்டி, வி.எஸ். அச்சுதானந்தன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், 1957-ம் ஆண்டு இஎம்எஸ் நம்பூதிரிபாடு அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த 97 வயது ஆர்.கவுரி அம்மா, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான ஓ.ராஜகோ பால், மத, கலாச்சார தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT