உலகிலேயே சாலை விபத்துகளில் மரணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பதன் காரணங்களை நிபுணர்கள் அலசியுள்ளனர்.
பல்வேறு இந்தியச் சாலைப் போக்குவரத்துக் கொள்கைகள், இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வராதது, மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இன்று துர்மரணங்கள் அதிகரித்துள்ளன என்று கூறுகின்றனர்.
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
பொது மக்கள் பயனுக்கு சாலைகளைத் திறந்து விடும் முன் சாலைத் தணிக்கைச் செய்யப்படுவதில்லை, மேலும் கட்டப்படும்போதே பாதுகாப்புக்கான எந்த வித வசதிகளும் செய்யப்படுவதில்லை, இதனால்தான் இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக மையத்தின் இயக்குனர் சுனிதா நரைன் கூறுகிறார்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியச் சாலைகள் படு மோசமாகவே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மையம் நடத்திய ஆய்வுகளின் படி டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு 5 முதல் 10 சாலை விபத்து மரணங்கள் நிகழ்கிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள 6 பிரதான சாலைகளில் அடிக்கடி விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன. காரணம் மோசமான சாலைக்கட்டுமானங்களே.
டெல்லி ஐஐடி பேராசிரியர் கீதிமா திவாரி கூறுகையில், “1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை, இதனால் பாதுகாப்பற்ற சாலைகளில் பயணம் செய்ய நேரிடுகிறது” என்றார்.
ஆகவே அரசு விரைவில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து சாலைகளின் தரத்தை அதிகரித்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று இந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.