இந்தியா

வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மோடி அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிடிஐ

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் சுஷ்மிதா தேவ் புவனேஸ்வரில் நேற்று கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதன்படி 4 கோடி பேருக்கு வேலை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது. இது 2009-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகவும் குறைவான அளவாகும். ஊழலை ஒழிப்போம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்துள்ளது.

சாதாரண பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை காட்டி வருகிறது. பல ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, ஐபிஎல் ஊழலில் சிக்கிய லலித் மோடி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT