டெல்லியின் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். தீ முற்றிலும் அணைந்த நிலையில் அங்கு மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை நேற்று காலை பார்வையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள். படம்: பிடிஐ 
இந்தியா

டெல்லி முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வணிக வளாக தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்றுமுன்தினம் மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்று வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்தக் கட்டிடத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் அலுவலகமும், ரவுட்டர் (கணினி வன்பொருள், உதிரிபாகம்) தயாரிக்கும் அலுவலகமும் இருந்தன.

இந்த விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை 27 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்தது. காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிடத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புப் படையினர் மீட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து தப்பினர். உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

19 பேரை காணவில்லை

இந்நிலையில் தீ விபத்துக்கு பிறகு 3 மாடி கட்டிடத்தில் இருந்த 19 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் அங்கிருந்து தப்பி குதித்து சென்றார்களா, அவர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமையாளர்கள் கைது

இதனிடையே தீ விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள 2 நிறுவனங்களின் உரிமையாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் வகையில் குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மணீஷ் லக்ரா தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார். ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

இந்நிலையில் நேற்று காலை தீ விபத்து நடந்த இடத்தை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டெல்லி அரசு உதவி வருகிறது என்று அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தீ விபத்து சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும். உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT