புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்களை மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) உறுதி செய்துள்ளது.
அதன் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோயில் அறக்கட்டளை ஊழியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் வாகன ஓட்டுநர் டின்னு (எ) ராம் ஷங்கர் யாதவ், அறக்கட்டளை ஊழியர் அனுகல்ப் மிஸ்ரா, அவரது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ரா, டின்னுவின் மருமகன் மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம் ஷங்கர் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அயோத்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 பேர் மீதும் வழக்கு: இவர்களில் காணிக்கை எண்ணும் பணி முழுவதையும் நிர்வகித்த டின்னு முக்கியக் குற்றவாளியாக வழக்குப் பதிவாகி உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் திருடி, அயோத்தி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சொத்துகள் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக இருந்ததாக காணிக்கை எண்ணும் பணியில் இருந்த மற்ற 7 பேர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில், லவ்குஷ் மிஸ்ரா வீட்டிலிருந்து ரூ.12 லட்சம், மணிஷ் குமார் யாதவிடம் இருந்து ரூ.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரும் நேற்று அயோத்தி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அறக்கட்டளையின் மற்றொரு முக்கிய நிர்வாகி கிருஷ்ண மோஹன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், உ.பி.யின் ஹர்தோயைச் சேர்ந்த, இந்திய வனப் பணியின் மகாராஷ்டிரப் பிரிவில் பணியாற்றியவர். இவர் நாக்பூரில் வசித்த போது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் இணைந்து பல பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2012-ல் பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் முக்கிய நிர்வாகி கோபால் ரான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எஸ்ஐடி விசாரணை நடுநிலையாக நடைபெறுவதற்காக இவர்கள் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. எஸ்ஐடி இடைக்கால அறிக்கையில், ராமர் கோயில் காணிக்கையில் கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 5 வரை 70 பெரிய திருட்டுகள் நடந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், கோயில் நிலத்திலும் ஊழல் நடந்துள்ளது என்று புகார் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களை எஸ்ஐடியிடம் சஞ்சய் சிங் அளித்துள்ளார். இதனால் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.