மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் அமித் ஷாவுக்கு ஒரு திறந்தமடலை எழுதியுள்ளார். அதில் தெலங்கானாவுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக 27 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தெலங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் சிந்தையுடன் அணுகுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் ஆகியன சுஷ்மா ஸ்வராஜ் காலத்திலிருந்தே நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக உள்ளன. தெலங்கானாவுக்கு கடந்த 8 ஆண்டுகளாகவே போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கே.டி.ராமராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், இதோ உங்கள் கேள்வித்தாள். தெலங்கானா மக்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த மடலுக்கு மாநில பாஜகவினரோ அல்லது அமித் ஷா எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. பாஜக சார்பில் தெலங்கானாவில் ப்ரஜா சங்ரம்மா யாத்ராவின் இரண்டாவது கட்ட நிறைவு விழா நடைபெறுகிறது. அம்பேத்கர் ஜெயந்தி நாளில் தொடங்கி இந்த யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது.
தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக. உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி முடிவு செய்துள்ளது.