மருத்துவ நுழைவுத்தேர்வு அவசர சட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்து விளக்கம் அளிக்கிறார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாண வர் சேர்க்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த அரசுகள் சார்பில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அமைச்சர் களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில அமைச்சர்கள் கூறியபோது, சிபிஎஸ்இ பாடத்துக்கும் மாநில பாடத்திட்டத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நடப்பாண்டில் மட்டும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக வரையறுக்கப் பட்ட அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக் கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் பிரணாப் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தப் பின்னணியில் அவசர சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா டெல்லியில் இன்று சந்தித்து விளக்கம் அளிக்கிறார். அதன் அடிப்படையில் பிரணாப் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் நட்டா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு எதிர்க்கவில்லை. இத்திட்டத்தை மத்திய அரசுதான் கொண்டுவந்தது. கடந்த 1-ம் தேதி நடந்த முதல்கட்ட நுழைவுத்தேர்வை 6.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 24-ம் தேதி இரண்டாம்கட்ட நுழைவுத்தேர்வு நடக்கும். அவசர சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரை திங்கள்கிழமை சந்தித்து உரிய விளக்கம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியபோது, மருத்துவப் படிப்புகளில் மாநில அரசு இடங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை சீனாவுக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக அவசர சட்டம் குறித்து அவர் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.