இந்தியா

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

இரா.வினோத்

பெங்களூரில் வெங்காயத்தின் விலை கடந்த புதன்கிழமை ஒரு கிலோ ரூ. 20 ஆக இருந்தது வியாழக்கிழமை ரூ. 35 ஆக உயர்ந்தது.

ஒரே நாளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளதால் பொது மக்களும், உணவு விடுதி உரிமையாளர்களும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த திடீர் விலையேற்றத்தின் காரணமாக கள்ளச் சந்தையில் வெங்காயத்தை பதுக்கும் செயல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெங்களூரில் உள்ள வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணா, ‘தி இந்து' செய்தியாளரிடம் கூறும்போது, இந்த ஆண்டு மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை சரியாக பெய்ய வில்லை. இதனால் வெங்கா யத்தின் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

அதேபோல வட இந்தியாவில் பண்டிகை, திருமண விழா காலம் விரைவில் தொடங்கவுள்ளதால், வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வெங்காயம் தற்போது சந்தைக்கு வந்துள்ளது.

சந்தையில் வெங்காயத்தின் இருப்பு குறைவதால் கடந்த இரு நாட்களில் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 18 வரை அதிகரித்துள்ளது.

பெங்களூரில் கடந்த புதன்கிழமை கிலோவுக்கு ரூ. 20 ஆக இருந்த வெங்காயத்தின் விலை வியாழக்கிழமை ரூ. 35 ஆக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை இருந்தது. ஆனால், புதன்கிழமை இரவு விலை உயர்ந்து ரூ 3100 முதல் 3500 வரை விற்பனையானது. இதன் காரணமாகத்தான் பெங்களூரில் வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் ரூ.100-ஐ நெருங்க வாய்ப்புள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக வெங்காய ஏற்றுமதியை குறைத்தால் விலையேற்றம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

கள்ளச் சந்தையில் பதுக்கல்?

வெங்காயத்தின் திடீர் விலை உயர்வு காரணமாக, அதை பதுக்கிவைக்கும் செயலில் சிலர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. வெங்காயத்தின் விலை மிக அதிகபட்சமாக உயரும்போது, அதனை சந்தைப்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதற்காக பதுக்கிவைத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளிலும் இதே போல வெங்காயத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் அதிக லாபம் ஈட்டினர். எனவே, இதனை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT