சுப்பிரமணியன் சுவாமி விடாப்பிடியாக ரகுராம் ராஜன் மீது வைத்து வரும் கடும் விமர்சனங்களை தான் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது:
நான் யாருக்கு எதிரான தனிநபர் தாக்குதல்களையும் அங்கீகரிப்பதில்லை, அது யாராக இருந்தாலும், ஆர்பிஐ கவர்னர் என்று இல்லை. ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான நிறுவனம் அது தன்னுடைய கருத்தை தானே வழங்கிக் கொள்ளும்.
ரிசர்வ் வங்கியின் கருத்துடன் ஒருவர் உடன்படவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம், ஆனால் அது அந்த விவகாரத்தைப் பொறுத்த விவாதமாகும். எனவே பிரச்சினைகள் குறித்த பொது உரையாடலைத்தான் நாம் அனுமதிக்க முடியுமே தவிர தனிநபர்கள் குறித்த விவாதத்தில் நாம் கவனம் செலுத்துதல் கூடாது
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிதிக்கொள்கை கமிட்டி செயலில் இறங்கும், எனவே அப்போது வங்கி மற்றும் அரசால் நியமிக்கப்பட்டவர்கள் இணைந்து அமர்ந்து நிதிக்கொள்கையை முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஜேட்லி.