இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய அரசு தலையிடவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

பிடிஐ

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் மத்திய அரசு தலையிடவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சாத்வி பிரக்யா சிங் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அண்மையில் கிரேட்டர் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சாத்வி பிரக்யா சிங்கின் பெயரை சேர்க்கவில்லை. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தலையிட்டதன் காரணமாகவே சாத்வி பிரக்யா சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

டெல்லியில் நேற்று நடந்த எல்லை பாதுகாப்புப் படை விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

என்ஐஏ உட்பட மத்திய புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகமோ இதர மத்திய அரசு வட்டாரங்களோ புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளில் தலையிடுவது இல்லை. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் மத்திய அரசு தலையிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. தற்போது அசாமில் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாடு முழுவதும் 14 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இது மிகப்பெரிய சாதனை.

ஊதிய கமிஷன் பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT