தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 1-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனால் கோடை விடுமுறையிலும் இவ்வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பு முன் வைத்த இறுதி வாதங்களுக்கு பதில் அளித்தார்.
ஆச்சார்யா வாதிடும்போது, “1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மாத ஊதியமாக 1 ரூபாய் மட்டுமே பெற்றார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
ஆனால் ஜெயலலிதா தரப்பு தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வாதிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் கூட, வருமானத்துக்கு அதிகமாக ரூ.34 கோடிக்கு சொத்துக்குவித்தது தெரிய வருகிறது.
ஆனால் நீதிபதி குமாரசாமி வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா ரூ.2 கோடி அளவுக்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளார் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவு தொடர்பாக தனது தீர்ப்பில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
எனவே நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள அடிப்படை கணிதப் பிழைகள் மட்டுமல்லாமல் சட்ட ரீதியான முரண்பாடுகள், குளறுபடிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ள ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.
விடுமுறையில் விசாரணை
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை
வரும் ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்றையதினம் அரசு தரப்பும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பும் தங்களது இறுதி தொகுப்பு வாதத்தை முடிக்க வேண்டும்” என்றனர்.
உச்ச நீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜூன் 29-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவசர வழக்குகளும், சில முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். ஆனால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பது வழக்கமான ஒன்று அல்ல.
எனவே உச்ச நீதிமன்றம் பதிவாளர் அலுவலகம், நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான இந்த அமர்வை விடுமுறை கால அமர்வாக மாற்றி, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.