அசாம் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக தமது பாரதிய ஜனதா கட்சி பெறவுள்ள வெற்றிக்கு பிரதமர் நரேந்தர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தம் ட்வீட் பக்கத்தில் அற்புதமான வெற்றி எனக் கூறி வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அசாமில் பாட்டும் பாஜக வெற்றி பெறும் நிலை உள்ளது. இங்கு தொடர்ந்து மூன்று முறையாக முதல் அமைச்சர் தருண் கோகாய் தலைமையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தோல்வியை தழுகிறது. இதனால், முதன்முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தம் கட்சிக்கு கிடைத்தமைக்காக பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளார்.
இதற்காக அசாமின் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக் கூறி அளித்த ட்வீட்டில் கூறுகையில், ‘அசாம் பாஜகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி அனைத்து நிலைகளுக்குமானது! அற்புதமானது!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் அசாம் பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளரான சர்பாணந்தா சோன்வாலிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. இது குறித்து தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள அவர், ’சர்பாணந்தாவிடம் பேசி பிரசாரத்தில் செய்த கடின உழைப்பில் கிடைத்த கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.’ எனக் கூறியுள்ளார்.
அசாம்வாசிகளின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற பாஜக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். இம் மாநிலத்தின் வளர்சி பாதையை புதிய உயரத்தில் கொண்டு செல்லும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடு முழ்வதிலும் உள்ள மக்கள் தனது நம்பிக்கையை பாஜகவின் மீது வைத்துள்ளதாகவும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் மோடி. மற்றொரு ட்வீட்டில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில் ‘அசாம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநில மக்கள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பணி செய்ய நான் என்றென்றும் உழைப்போம் என உறுதி கூறுகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.