இந்தியா

ஏழைகள் மீது காங்கிரஸுக்கு மட்டும்தான் அக்கறை: சிலிண்டர் விலையைக் குறிப்பிட்டு ராகுல் ட்வீட்

செய்திப்பிரிவு

ஏழைகள், நடுத்தர மக்களின் நலன் மீது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் அக்கறை இருக்கிறது என்று சிலிண்டர் விலை உயர்வை ஒப்பிட்டு ட்விட்டரில் பாஜகவை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "2014ல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410 மானியமாக ரூ.827 வழங்கப்பட்டது. 2022ல் பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999, மானியம் பூஜ்ஜியம் என்றளவில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் தான் ஏழை, நடுத்தர இந்தியக் குடும்பங்களில் நலனில் அக்கறை கொண்டுள்ளது. இதுதான் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா, "சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள் தங்களுக்குத் தேவையான அளவு சிலிண்டர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2.5 மடங்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. 2014ல் இருந்ததுபோல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

சிலிண்டர் விலையேற்றம்.. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.965.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு நேற்று (மே 7) ஒரு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.307 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகசாமான்ய மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்காக மட்டும் ஆயிரத்து நூறு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT