இந்தியா

இமாச்சல் சட்டப்பேரவை வளாக வாயிலில் காலிஸ்தான் கொடி: முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கண்டனம்

செய்திப்பிரிவு

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாக வாயிலில் காலிஸ்தான் கொடியை விஷமிகள் சிலர் கட்டிச் சென்றுள்ளனர். இன்று (ஞாயிறு) அதிகாலை இது கண்டறியப்பட்டது. இச்சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கோழைத்தனமான சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யார் இந்த காலிஸ்தான்கள்.. "இந்தியாவில் சீக்கியர்கள் ஒரு தேசிய இனம். எனவே, சீக்கியர்களுக்கு என்று ஒரு தனி நாடு தேவை". இப்படியொரு கோரிக்கையை வலியுறுத்தி உருவானதுதான் காலிஸ்தான் இயக்கம். 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் போராளிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனையடுத்து பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இப்போது காலிஸ்தான் அமைப்பு அரசால் தீவிரவாத அமைப்பாக அறியப்படுகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்தோர் இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாக வாயிலில் காலிஸ்தான் கொடியை விஷமிகள் சிலர் கட்டிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தக் கோழைத்தனமான செய்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோழைகள் இரவோடு இரவாக தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டிச் சென்றுள்ளனர். இங்கு குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடைபெறுகிறது. இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இச்செயலை கோழைகள் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். இந்தச் சம்பவத்தை செய்தவர்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். இருளில் இயங்காமல் பகலில் வெளியே வாருங்கள்" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் எஸ்.பி. கங்கரா சர்மா கூறுகையில், "பின்னிரவு அல்லது அதிகாலையில் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். சம்பவ இடத்திலிருந்து நாங்கள் கொடிககளை அப்புறப்படுத்திவிட்டோம். பஞ்சாபிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூட இதனைச் செய்திருக்கலாம். வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இருப்பினும் இதனை ஓர் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டு விசாரிக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT