புதுடெல்லி: ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியாக ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திரா, அசாம், இமாச்சலபிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு 2022-23-ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனை மாதாந்திர தவணை அடிப்படையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட மாநிலங்களுக்கு 2-வது தவணை வருவாய் பற்றாக்குறை நிதியாக, மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.7,183.42 கோடி விடுவித்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இம்மாநிலங்களுக்கு இதுவரை ரூ.14,366.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.