மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தம் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் பிரச்சார மேடைகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆறுகட்டமாக அறிவிக்கப்பட்ட சட்டசபை தேர்தல் வரும் மே 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியை ஆதரித்து பேசிய சோனியா, அம் மாநில முதல் அமைச்சரான மம்தாவை கடுமையாகத் தாக்கி பேசி இருந்தார். இதேபோல், ராகுலும் தன் பிரச்சாரத்தில் மம்தாவை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் மம்தாவை போல், காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சியை துவக்கிய தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என கோரி அக்கட்சியின் சில மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸின் டெல்லி வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கி உள்ள சரத்பவார், மம்தா, ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. இதற்குள் அவர்களை தனிப்பட்ட முறையில் எங்கள் முக்கியத் தலைவர்களே கடுமையான விமர்சனம் செய்வது அதிகமானக் காயப்படுத்தி விடும். இதன் பிறகு அவர்கள் காங்கிரஸுக்கு திரும்புவது
குறித்து எந்தக் கட்டத்திலும் யோசிக்காமல் இருந்து விடுவார்கள். எனவே, எங்கள் கோரிக்கையை அவர்கள் முன் ஒரு ஆலோசனையாக வைத்துள்ளோம்.’ எனத் தெரிவித்தனர்.
இந்தக் கடிதத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட போது, மம்தா மட்டுமே ஒரே அரசியல் தலைவராக அவரை நேரில் சந்தித்து ஆதரவளித்திருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.