கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்பான சட்டங்கள் சரி யானவைதான். பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்பதை ஏற்க முடியாது. பேச்சுரிமை என்பது அவதூறானதாக இல்லாமல் இருப் பதுதான்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் அரசியல் கூட் டங்களில் அவதூறாக பேசியதாக அவர்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இந்த வழக்கை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் ஒன்றாக இணைக் கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
‘‘கிரிமினல் அவதூறு குறித்த குற்றவியல் சட்டப் பிரிவுகள், 499, 500 ஆகியவற்றை நீக்க வேண்டும். அவை பிரிட்டிஷ் காலத்து சட்டங் கள். தற்காலத்துக்கு ஒத்துவராது’’ என்று ராகுல் உட்பட 3 பேரும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். மேலும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 19(2)-க்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு சட்டங்கள் இருக் கின்றன. அந்த சட்டங்கள் பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த ஓராண்டுக்கு மேல் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலை யில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகி யோர் அடங்கிய அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 19-2ல் பேச்சுரிமை என்பது அவதூறு இல்லாத பேச்சுரிமையை தான் குறிக்கிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ன் கீழ் இன்னொரு வரின் மதிப்பை குறைக்கவோ, களங்கப்படுத்தவோ இருக்கும் வகையில் ஒருவரது பேச்சும், கருத்தும் இருக்கக் கூடாது. அவதூறு வழக்கு சட்டங்கள் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்பதை ஏற்க முடியாது. எனவே கிரிமினல் அவதூறு சட்டங்கள் செல்லும். அவற்றை ரத்து செய்ய முடியாது.
அடுத்தவர் மனம் புண்படும்படி, மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசுவது, கருத்து தெரிவிப்பது அவதூறாகும். எனவே, கிரிமினல் அவதூறு வழக்கு சட்ட நடைமுறைகள் சரியானதே. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அவதூறு வழக்கில் ராகுல் உட் பட 3 பேர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க 8 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் தீர்ப்பில் கூறுகையில், ‘‘மனுதாரர்களுக்கு வழங் கப்பட்டுள்ள சம்மன் மீதான தடை இன்னும் 8 வாரங்களுக்கு நீடிக்கும். அதற்குள் அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம்’’ என்றனர். எனவே, 8 வாரங்களுக்கு அவர்களை போலீஸார் கைது செய்ய முடியாது என்பது குறிப் பிடத்தக்கது. மேலும், அவதூறு வழக்கில் சம்மன் பிறப்பிக்கும் முன்பு நாடு முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட்டுகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அவதூறு வழக்கில் அதிகபட்ச மாக 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டப் பிரிவு 500 வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.