ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ரகசிய சுரங்கப் பாதை கண்டறியப்பட்ட இடத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள். படம்: பிடிஐ 
இந்தியா

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி: தீவிரவாதிகளின் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் சக் ஃபக்கிரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ரகசிய சுரங்கப் பாதை ஒன்றை கண்டறிந்தனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்கு 150 மீட்டர் நீளத்துக்கு இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பிஎஸ்எப் டிஐஜி எஸ்.பி.எஸ்.சாந்து நேற்று கூறும்போது, “பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியேறும் பகுதி 2 அடி உயரத்துக்கு உள்ளது. வெளியேறும் பகுதியை பலப்படுத்த 21 மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எதிர்வரும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் தீவிரவாதிகள் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜம்முவின் சுஞ்சுவான் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சிஐஎஸ்எப் வீரர்களின் பேருந்து மீது 2 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய இருவரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT